பாடசாலை என்பது ஒரு தேச விருச்சத்தில் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் உரைச்சாலை ஆகும் .அது அறிஞர் முத்துக்களை கொத்துக் கொத்தாக உற்பத்தி செய்யும் அறிவாலயம் ஆகும்.பாடசாலைகள் முளைத்திருக்காவிட்டால் பண்பாட்டு விழுமியங்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் தலைத்திருக்காது. கத்தி,கம்புகளுடன் திரிந்த மனித குலம் பேனா பிடிக்க ஆரம்பித்த போது தான் வாழ்க்கை தேனாய் இனிக்க துவங்கியது. பிஞ்சுகளுக்கு பசுமரத்தானியாய் அகரங்களை அறிவிப்பது முதல் அகில அறிவையும் அனைவருக்கும் வழங்குவது பாடசாலையை ஆகும்.
இத்தகைய கண்ணியமிக்க ஒரு தளம் கிண்ணியாவில் இன்னும் ஒரு தேவை எனும் சான்றோர் சிலர் எண்ணியதன் விளைவாகவே ரீ.பீ ஜாயா வித்யாலயம் கருக்கொண்டது. இதன் அரசியல் ரீதியான ஸ்தாபகர் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் துறைமுகங்கள் கப்பல் துறை இராஜாங்க அமைச்சருமான எமது மண்ணின் புதல்வன் கௌரவம் எம் .ஈ .எச் .மகரூப் அவர்கள் ஆவார்,மன்னாரை பிறப்பிடமாக கொண்ட எம் கே எம் பஷீர் அவர்கள் கோட்டக்கல்வி அதிகாரியாக இருந்த காலகட்டத்திலேயே இப்பாடசாலை உருவாக்கப்பட்டது.
1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாணவர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்ததால் தி/ கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியில் வகுப்பறை தட்டுப்பாடு நிலவியது இதனை நிவர்த்திக்க தரம் ஒன்று தொடக்கம் மூன்று வகையான வரையான வகுப்புகளை தற்காலிகமாக நெற்களஞ்சிய சந்தைக்கு சொந்தமான கட்டிடத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதென அப்போதைய பாடசாலை அபிவிருத்திச் சங்கம் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அப்போது நெற் சந்தைப்படுத்தும் சபைக்குரிய கட்டிடம் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது இதனால் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற இந்தியா இராணுவத்தின் அனுமதியைப் பெற்று அன்று பகுதி தலைவராக இருந்த ஜனாப் ஏ. எம். எம். அசீஸ் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் ஆரம்பப் பிரிவு நெற்சந்தைப்படுத்தும் சபை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் நெற்சந்தைப்படுத்தும் சபைக்கு கல்லூரியினால் வாடகை வழங்க வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டது. இதன் பின்னரே இந்த விடயம் இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் எம் .ஈ .எச் .மகரூப் அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சூழ்நிலையிலேயே அதனை தனிப்பாட சாலையாக மாற்றுவது பற்றிய கருத்துக்கள் குறித்த பிரதேச பொதுமக்களிடையே வலுப்பெற்றது. குறித்த பிரதேச மக்கள் கோரிக்கையை முன் வைத்ததை தொடர்ந்து முன்னாள் கப்பல் துறை இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் எம் .ஈ .எச் .மகரூப் அவர்களின் முயற்சியினால் தற்காலிகமாக இயங்கிய தி/கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியின் ஆரம்ப பிரிவானது 01.02.1994 அன்று தி/ரீ.பீ ஜாயா வித்யாலயம் என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது.
இப்ப பாடசாலையை உருவாக்குவதில் காலம் சென்ற ஐதுரூஸ் அப்துல் லத்தீப் (அப்போதே இர்பான் வித்தியாலய அதிபர்) எம்.ஏ .சி முகைதீன் (அப்போதைய வடகிழக்கு மாகாண கல்விச்செயலாளர் )காலம் சென்ற நடராசமூர்த்தி (அப்போதைய பிராந்திய கல்வி பணிப்பாளர் திருகோணமலை )காலம் சென்ற கே. எம். பஷீர் (அப்போதைய கிண்ணியா,கோட்ட கல்வி பணிப்பாளர் )ஆகியோர் முன்னின்று உழைத்தனர். இவர்களது உழைப்பு இந்த பாடசாலை வரலாற்றில் மறக்க முடியாதது.
நெற் களஞ்சிய சபைக்கு சொந்தமான திறந்த கட்டிடத்தில் 653 மாணவிகளுடனும் 19ஆசிரியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இப்ப பாடசாலையின் முதலாவது அதிபராக கிண்ணியாவை சேர்ந்த காலம் சென்ற எம். எஸ் .ஏ. சலாம் கடமையாற்றினார். ஆரம்பத்தில் ஒன்று தொடக்கம் ஐந்து வரையிலான தரங்களைக் கொண்ட மாணவிகளுடனே இயங்கிய வந்த இப்பாடசாலை 01.01. 1995 அன்று தரம் 9 வரையிலான மாணவிகளை கொண்டு இயங்கும் அளவிற்கு தரம் II ஆக தரம் உயர்த்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து முகமது இஸ்மாயில் முஹம்மது முஸ்தபா அதிபர் மேற்கொண்ட முயற்சியினால் 01.01 .2004 இல் தரம் 10ற்கான அனுமதி வழங்கப்பட்டதுடன் 2005 ஆம் ஆண்டு இவருடைய காலத்திலேயே முதன் முதலாக சாதாரண ப ரீட்சைக்கு மாணவிகள் தோற்றினர்.
ஓர் ஆரம்பப் பிரிவு பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட ரீ.பீ ஜாயா வித்யாலயமானது அதிபர் முஸம்மில்அவர்களின் முயற்சியினாலும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் அவர்களின் உதவினாலும் 01.01.2016 அன்று 1சி பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு தி/கிண்ணியா/ரீ.பீ ஜாயா மகளிர் மகாவித்தியாலயம் என்ற பெயருடன் தற்போது தரம் 13வரையிலான மாணவிகளைக் கொண்டு இயங்கி வருகின்றது.இன்று இப்பாடசாலையில் 654 மாணவிகள் கல்வி பயில்கின்றனர். 40 ஆசிரியர் கல்விப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.